ஆமாம்யா எனக்கு ரெண்டு பொண்டாட்டிங்க உனக்கென்ன நான்தானே கட்டிகிட்டேன்,
நானே பாத்துக்கிறேன் நீ சும்மாயிருன்னு ரொம்ப
சுலபமா சர்ச்சைகளை ஒதுக்கியவர். கேள்வி பதில்களும், நாவலின் முன்னுரையுமே புத்தகத்தினை வாங்கிய பணத்துக்கு
ஈடாக்குமளவிற்கு எழுதியவர்.
இவரோட திறமைக்கு இவருக்கு கிடைத்த விருதுகள் குறைவென்பது எனது கருத்து. பாவம்
அரசியல் பண்ண தெரியாம, காக்கா புடிக்கலேன்னா
அதெல்லாம் கிடைக்காதுன்னு தெரியலேன்னு நினைக்கிறேன். இல்லேன்னா உங்க விருதெல்லாம்
எனக்கு முக்கியமில்லை, வாசகர்கிட்டே
கிடைச்ச "எழுத்து சித்தர்" ன்ன விருதே போதும்ன்னு இருந்திருக்கலாம்.
90களில் கிடைக்கிற எல்லா புக்கையும்
படிச்சிட்டிருக்கிறப்ப இவரோட எழுத்துக்கள் பழக்கமாகின. ஏதோ ஒண்ணு வித்தியாசமா
இருக்கேன்னு நினைச்சி படிக்க ஆரம்பிச்சது ஏறக்குறைய இவரோட 120 நாவல்கள் வரை 2005 வரை இந்தியாவில் இருந்தவரைக்கும் தேடி தேடி வாங்கி படிச்சி,
இப்பவும் அதெயெல்லாம் பத்திரமா வச்சிருக்கேன்.
குறிப்பா நான்காம் பிறை ன்னு ஒரு நாவல் படிச்சதுக்கப்புறம்தான் வெளிநாட்டில
வேலைக்கு போணும்ங்கிற எண்ணம் அதிகமாச்சு. அந்த நாவலின் ஹீரோ கதாபாத்திரமும் எனதும்
சற்றேறக்குறைய ஒண்ணா இருந்தது எனக்கு பெரிய உந்துதலா இருந்தது.
உண்மையை சொல்லணும்னா பதின்ம வயசில இவரோட காமம் கலந்த எழுத்துக்கள் மேல ஒரு
கிறக்கம் இருந்தாலும் போக போக பெண்களை பற்றிய தெளிவான கருத்துக்களும், ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசிக்கிற
கோணங்களும் ஒரு மாதிரி வித்தியாசமா யோசிக்க வச்சிது. யாரோ சமீபத்துல கூட சொன்ன
மாதிரி பாலகுமாரனோட புத்தகம் படிச்சாலே நமக்கு ஒரு திமிர் வரும் பாருங்க, அப்பப்பா அது ஓவர் தனி சுகம். எப்படி
ஜிம்முக்கு போறவன் ரெண்டு கையையும் அகட்டி வச்சிக்கிட்டு கர்வமா நடப்பானோ அப்படி
ஒரு தோணல். நான் ரெண்டையும் அனுபவிச்சிருக்கேன். இதுல இன்னொரு கர்வம் என்னன்னா வெளியில
பாலகுமாரனோட புக்கை படிச்சவன்னு காமிச்சிக்கிறதுல ஒரு தனி பெருமிதம். அத்தனைக்கும்
நம்மை தகுதியாக்கியவர்.
எனக்கு தெரிஞ்சு எழுத்தாளனோட
வருமானத்தை பத்தி பகிரங்கமா இவர்தான் பேச ஆரம்பிச்சார், அதோட இவரோட எழுத்துக்களை திருடினவங்களையும் மிக மோசமா ஏன்டா
இப்படி பண்ணிட்டமோன்னு கூச வக்கிர அளவுக்கு செம்ம காட்டு காட்டியிருக்கார்,
ஒரு வகையில அதுவும் கூட ஒரு திமிர்தானோன்னு
தோணும்.
தியானத்தை பத்தியும், மூச்சு பயிற்சி
பத்தியும் இவரோட புரிதல்களும், அதை மற்றவர்களுக்கும் புரிய வைக்க
முயற்சித்ததற்கும் ரொம்ப மெனக்கெட்டவர். ஏதோ நான் கத்துக்கிட்டேன், என்னோட போகட்டும்ன்னு இருக்காம இவரோட எழுத்த
விரும்பினவங்களுக்கும் அவங்களுக்கு புரியிற மாதிரி சொல்லி கொடுத்திருக்கார். நிறைய
இடத்துல எனக்கு பயன்பட்டிருக்கு இவரோட அந்த எழுத்துக்கள்.
ஔவையார், பட்டினத்தார்,
சேஷாத்திரி ஸ்வாமிகள், அருணகிரி நாதர் ன்னு நிறைய தெரிஞ்ச பெயர்களின் தெரியாத வாழ்க்கை வரலாற்றினை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர்.
திரையுலகத்தில் மிகவும் நேர்த்தியாக தன்னை உள்நிறுத்தி, ஆளுமையை செலுத்தி, முடிந்தவரை திரைபிரபலங்களிடம் ஜால்ரா தட்டாம இருந்துகிட்டே, மெதுவா நகர்ந்துவிட்டார்.
புதிதாக எழுத நினைப்பர்வர்களுக்கு மற்றவர்களின் எழுத்துக்களை படிக்க சொல்லி
வலியுறுத்திகிட்டேயிருப்பார்.
உடையார் பற்றி பேசுனாலே கிட்டத்தட்ட சில நாள் பேசிகிட்டியிருக்கலாம், அவ்வளவு உழைப்பு. எனக்கு தெரிஞ்சு சமகாலத்துல
இவ்வளவு வருத்திக்கிட்டு எழுதினவங்க ரொம்ப கம்மின்னு நினைக்கிறேன். பொன்னியின்
செல்வனை படித்திருந்தாலும் உடையாரின் கோணம் எந்த விதத்திலும் அதனை பிரதிபலிக்காமல்
பிரமிக்கவைத்திருப்பார்.
எப்படியோ நல்லா அனுபவிச்சு வாழ்ந்து, கொஞ்சம் நோயோட ரொம்ப சிரமப்படாம போயி சேர்த்துட்டார்.ஒரு எழுத்தாளனா அவர்
நினச்சித சாதிச்சிட்டாரான்னாக்க என்னோட பதில் ஆமான்னுதான் சொல்லுவேன்.




